Wednesday, June 13, 2018

Meaning of Sivan and Nakkiran's Poet

"திருவிளையாடல்" திரைப்படத்தில் சிவனுக்கும் நக்கீரருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில் சிவன் ''அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி'' என்று தொட‌ங்கும் வசனத்தையும் பிற‌கு நக்கீரர் ''சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்'' என்று தொடங்கும் வசனத்தையும் பேசுவர். இந்த வசனங்களின் ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன அர்த்தம்...?

அந்த திரைப்படத்தில் வரும் வசனம்:
சிவன்:
அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
பங்கம் படவிரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?

நக்கீரன்:
சங்கறுப்பது எங்கள் குலம்,
சங்கரனார்க்கு ஏது குலம்? – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
இரந்துண்டு வாழ்வதில்லை..!!!

பொருள்: நக்கீரனின் குல தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதை தான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி(அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக்கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.

அதற்கு மறுமொழி, "சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது. மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப்பாத்திரமாக்கி இரந்துண்டு(பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.

இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.

அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் – சங்கதனைக்
கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரில் பழுதுஎன் பவன்

சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ – சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டா வாழ்வோம்...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

No comments:

Post a Comment